ஆசியக் கண்டத்தில் வந்து ஆடும் அயல் அணிகள் டாஸில் வென்றால்தான் ஓரளவுக்காவது உள்நாட்டு அணிகளுக்கு எதிராக சவால் அளிக்க முடியக்கூடிய நிலை வருத்தத்திற்குரியது என்றாலும் டாஸ் என்பது யார் கையிலும் இல்லை. தென் ஆப்பிரிக்க அணி இங்கு 9 டாஸ்களில் தோற்றுள்ளது.
இந்நிலையில் டாஸ் வெற்றி தோல்வியைத் தீர்மானித்து வருவதால் அதில் வெல்வது யார் கையிலும் இல்லாத தூய எதேச்சை என்பதாலும் டுபிளெசி தனக்கு இல்லாத அதிர்ஷ்டத்தை வேறு ஒருவரை டாஸிற்கு அனுப்புவதன் மூலம் தென் ஆப்பிரிக்காவின் அதிர்ஷ்டத்தை 3வது டெஸ்ட்டில் சோதிக்கப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசி இது குறித்து கூறியதாவது:
நாங்கள் சில கட்டங்களில் இந்தத் தொடரில் நன்றாக ஆடினோம் என்று கருதுகிறேன். முதல் டெஸ்ட்டை உதாரணமாகக் கூறலாம். நாளை (சனிக்கிழமை, 19-10-19) ராஞ்சியில் டாஸிலிருந்தே நன்றாகத் தொடங்க முடிவெடுத்திருக்கிறோம்.
ஒருவேளை நாளை வேறு ஒரு வீரரை டாஸ் போட அனுப்பினாலும் அனுப்புவோம், அதற்கான சாத்தியங்கள் உள்ளன, ஏனெனில் இந்த டாஸ் விவகாரத்தில் என்னுடைய ரெக்கார்ட் அவ்வளவு நன்றாக இல்லை.
மேலும் டாஸில் வென்று ஓரளவுக்கு நல்ல ரன் எண்ணிக்கையை எட்டுவது நல்ல தொடக்கமாக அமையும், அங்குதான் நாங்கள் தொடங்க வேண்டிய தேவையிருக்கிறது.
முதல் இன்னிங்சில் நன்றாக ஆடி தேவையான ரன்களை எடுத்து விட்டோமானால் அந்த நிலையிலிருந்து எதுவும் சாத்தியமே. பிட்ச் வறண்டு காணப்படுகிறது, ஸ்பின்னர்களுக்கும் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கும் சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. எனவே முதல் இன்னிங்ஸ் ரன் எண்ணிக்கை முக்கியமானது. 2வது இன்னிங்சில் எதுவும் நடக்கலாம்.
இவ்வாறு கூறினார் டுபிளெசி.